பாடல் எண் :3320
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு
பாடல் எண் :3678
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே
பாடல் எண் :3691
சாகாத தலைஇது வேகாத காலாம்
தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக் காகாத நினைவே
ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
தனிநட ராசஎன் சற்குரு மணியே
பாடல் எண் :3910
சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
பாடல் எண் :4145
சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே
பாடல் எண் :4748
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே
பாடல் எண் :5517
சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.