செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச் சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன் பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய் மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா ஐவகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே