சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம் துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய் விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால் செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய் ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான் உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே