தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந் தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப் பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன் பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய் என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே