தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச் செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன் காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம் மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே