தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச் சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய் உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன் உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க் கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும் கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே