நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய் மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே
நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய் இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம் ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே