நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே செஞ்சாற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப் பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே