நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால் நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள் சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே
நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றம்ஒன்றும் ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய் புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால் எண்ணியஎல் லாம்புரிகின் றேன்