நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பிப் பாரின்மேல் அலையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில் காரின்மேல் வரல்போல் கடாமிசை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன் வாரின்மேல் வளரும் திருமுலை மலையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே