பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும் பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற் போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும் வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன் றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே