பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித் தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச் செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய் திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத் திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே