பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப் பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச் சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய் அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே