பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன் ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர் ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன் கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன் தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே