பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள் பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத் தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச் சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால் தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும் நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும் நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே