போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே
போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர் புரிதவக் காட்சியே போற்றி போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம் புகல்சிவ போகமே போற்றி போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப் பூரண வெள்ளமே போற்றி போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே போற்றிநின் சேவடிப் போதே