மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும் பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப் பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில் தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே