மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத் துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச் சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக் கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே