மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே இறப்பறியாத் திருநெறியில் என்னைவளர்த் தருளும் என்னுடைய நற்றாயே எந்தாயே நினது சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப் பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய் பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே திருநிலையில் - முதற் பதிப்பு, பொ சு, பி இரா