முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள் கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக் கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத் தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின் தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே