வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத் தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே
வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும் ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும் ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும் ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே