வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம் வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம் தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம் தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன் அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே