வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும் வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத் தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம் யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே