விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம் புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப் புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ் பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே