விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள் விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக் களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான் காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும் ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே