Vallalar.Net

ஆதிசக்தியின் திரை வண்ணம் எது? எப்போது திரை விலகும்?

கலப்புத் திரையால் கருதனுபவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

கூட்டுத் திரையால், எண்ணும் அனுபவங்களை, மனக்குழப்பத்தால் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி.

இதற்கு முன், நம்மைத் தனித்து மறைத்த திரைகள், இப்போது கூட்டுத் திரையால் மறைக்கிறது. இந்த திரையால் மறைக்கப்படுவது, கருது அனுபவங்கள். கருது என்றால் எண்ணுதல் அல்லது மறந்ததை நினைத்தல், என்பது தமிழ் பொருள். நமக்கு, இந்த திரைவரைக்கும் ஏற்பட்ட அனுபவங்களை, நம் நினைவில் இருந்து மீண்டும் எண்ணிப் பார்க்க முடியாமல், மனதைக் குழப்பமடையச் செய்து, மறைக்கிறது.

கலப்புத் திரைக்கான சக்தியாக சிற்சக்தி குறிப்பிடப்படுகிறது. இந்த சிற்சக்தி தான், அனைத்து சக்திகளுக்கும் ஆதாரம். இதை ஏக சிற்சித்தியே, இயல்உற, அனேகம் ஆகியதென்ற, என் அருட்பெருஞ்ஜோதி. என்ற அகவல் வரியிலிருந்து அறியலாம். ஒரு சக்திதான் செயல்படுதலுக்காக அனேகமாக ஆகியதாகச் சொல்கிறார்.

அலப்பு என்றால் மனக் குழப்பம்,பிதற்று, மனக்கலக்கம் என்று பொருள்.

சுருக்கமாக சொன்னால்.

நமக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தி, இதற்கு முந்தைய நமது அனுபவங்களை, மீண்டும் எண்ண முடியாமல் மறைக்கிறது, சிற்சக்தியின் கலப்பு திரை.

பரோபகாரம், சத்விசாரம் இரண்டும், நம்மை மறைத்துள்ள கலப்பு திரையை விலக்கி, சிவத்தைக் காட்டும். அருட்சிவத்தை மறைக்கும் கடைசி திரை இந்த சிற்சக்தி.

கடவுள் நிலை அறிந்து, அம்மயம் ஆவதற்கு உள்ள ஒரே வழி, ஜீவகாருண்யத்துடன் கூடிய, உண்மை விசாரணை. இதையன்றி செய்யப்படும் அனைத்து செயல்கள் எல்லாம், மாயாசால செயல்கள். எனவே பரோபகாரம், சத்விசாரம் இரண்டும் நம்மை மறைத்துள்ள அனைத்து திரையையும் நீக்கி, நம்மை என்றும் அழியா வடிவான அருள் வடிவாக்கும்.

நமது மற்ற காணொளி பார்க்க

Date:2023-11-11 00:00:00