-
சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 014. சிற்சபை விளக்கம் siṟsapai viḷakkam
6. கரண வாதனை யால்மிக மயங்கிக்
கரண வாதனை யால்மிக மயங்கிக்
கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
-
சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 087. கைம்மாறின்மை kaimmāṟiṉmai
7. மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 087. கைம்மாறின்மை kaimmāṟiṉmai
11. அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
18. சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 099. தத்துவ வெற்றி tattuva veṟṟi
20. மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
21. சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 005. பிரார்த்தனை மாலை pirārttaṉai mālai
22. தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 107. ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்) ñāṉasariyai (vāypaṟai ārttal)
25. இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
அப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே.
-
உபதேசக் குறிப்புகள்
55. காயத்ரி காயத்ரி: கா-ய-த்ரி. க ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம். ய வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். ஆ அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று. அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்க மின்றிக் கடந்தால், ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு - இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) - பிடி, பற்றினால்; நான்கு - நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.
மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.
56 தத்துவம் தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் - அது. அது வென்பது சிவம். த்வம் - அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை. 57. குடிலை குடிலை என்பது மூலப் பிரகிருதி. 58. பூதம்
பூதம் என்பது: பூ-த-ம். பூ அலர்ந்தது, த தடித்தது, ம் கலத்தல், ஆதலால், எங்கும் நிறைந்து அணுவாய்க் கலத்தல் பூதம்.
பூதம் என்பதன் சப்தார்த்தம் பூதமென்பது யாது? அதனது சொரூப ரூப சுபாவங்களென்ன? பூதம் என்பதற்குச் சப்தார்த்தம்: பூ மலர்ந்தது, பிரகாசம்; த தடித்தது, காரியம்; ம் ஊன்றியது, நிலை. இதற்குத் தாத்பரியம்: நிலை பெற்ற காரியம் பிரகாசம். பூத அக்கினித் தோற்றமென்றும் பெயர். பூதகாரிய அக்கினி என்றும் பெயர். பூ என்பதில் உகர உயிரும் தம் என்பதில் அகர உயிரும் எண்ணில் அ - ம், உ - ம் ஆயின, ஆக தொகை 10. இந்தப் பத்து இடத்திலும் பூதகாரிய அக்கினித் தோற்றம் உண்டு. கல்லுக்குள்ளிருக்கிற நெருப்பு பஞ்சில் காரியப்படுவது போலாம். பத்துப் பொது ஸ்தானங்களாவன: மண், ஜலம், அக்கினி, காற்று, வெளி, பிரகிருதி, மாயை, சூரியன், சந்திரன், நக்ஷத்திரம் ஆக இடம் 10. 59. பௌதிகம்
பௌதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பௌ+தீ+அகம் = பௌதீகம். பௌ - மூடல், அகம் - உள், தீ - அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பௌதீகம். தீ என்பது காரண உஷ்ணம்.
பௌதிகங்கள் பௌதிகங்க ளென்பவை வீரம் பூரம் முதலிய 64 சரக்குகள். 60. நினைப்பு மறைப்பு நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்: சந்திரன் அக்கினியோடு கூடி, சூரியபாகத்திலுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும் போது, உண்டாகும் நினைப்பு; சூரியன் அக்கினியோடு கூடி, சந்திர பாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும்போது உண்டாகின்றது மறைப்பு. நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது யாது? ஜனனம், மன அசைவு, ஒன்றை நினைத்தல், சகலகாலம், மேற்படி தத்துவம் வேறொன்றில் பற்றல், தத்துவத்தின் அசைவாகிய ஆவி மேலேறுதல், மேற்படி ஆவி ஏறின இடத்தில் நில்லாது அக்கிரமித்தல். மறைப்பென்பது யாது? மரணம், தூக்கம், மனம் ஒன்றைப்பற்றி உடனே மறைதல், கேவலகாலம், மேற்படி தத்துவத்தின் கூர்மை கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை இல்லாதிருத்தல், மேற்படி ஆவி அக்கிரமித்தல், மனம் ஆபாசப்பட்டுச் சூனியமாதல். மேற்குறித்த நினைப்பு மறைப் பற்று நிரதிசயானந்தமாய் அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்க சாதனம். நினைப்பு மறைப்பு இந்த ஜீவன் அக்கினியின் சூரியபாகத்தி லுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும்போது நினைப்பும், அக்கினியின் சந்திரபாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும் போது மறைப்பும் உண்டாகின்றன. இதுதான் நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம். நினைப்பு மறைப்பு
நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது ஜனனம், மனம் நினைத்தல், சகலம், தத்துவத்தின் ஆவி அதிக்கிரமிக்கிறது. மறைப்பென்பதற்குப் பொருள்: மரணம், கேவலம், தூக்கம், தத்துவத்தின் கூறுபாடு கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை யில்லாதிருத்தல், அதனது உஷ்ணம் அதிக்கிரமிக்கிறது, மனம் ஆபாசப்பட்டுக் கீழ்ச்செல்லுதல். ஆதலால், நினைப்பு மறைப்பு அற்று, நிரதிசயானந்தமாய் அருள்வடிவமாவதே சுத்தசன்மார்க்க சாதனம் இது ஒருவாறு.
-
உபதேசக் குறிப்புகள்
99. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். அடிகள் அங்கிருந்த காலத்திற் செய்த உபதேசம்.
-
உபதேசக் குறிப்புகள்
109. துர் மரணம்
ஜீவர்களுக்கு வாந்திபேதி மாரடைப்பு முதலியவற்றால் நேரிடும் துர்மரணங்கள் ஆகாரக் குறைவாலும் மிகுதியாலும் அக்கிரம அதிக்கிரமத்தாலும் பொருந்தலாலும் - இவை போன்ற பலவகைக் கெடுதியாலும் உண்டாகின்றன.