உபதேசக் குறிப்புகள்
106. ஞானசித்தியும் ஒளிநிலையும்
இரவில் தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. ஏனெனில், அஃது பிராண நஷ்டம் பண்ணும். ஆதலால், நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரையில்லாதிருந்தால், ஆயுள் விருத்தியாம். இஃது சாத்தியனுக்கு. சாதகன் ஒருவாறு நித்திரை செய்தல் வேண்டும். கிருகத்தில் இருளில்லாது எங்கும் பிரகாசமாய் தீபம் வைத்தால், மேற்படி இருள் அந்தத் தீபத்தில் அடங்கும். அதுபோல் ஜீவதீபமாகிய நாம் வசிக்கிற கிருகத்தில் பிரகாசமில்லாவிட்டால், மேற்படி இருள் ஜீவப் பிரகாசமாகிய நம்மிடத்தில் சேர்ந்து நஷ்டத்தைப் பண்ணும். அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிற கிருகத்தில் அருட்பிரகாச மில்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் சீக்கிரமாம்.
ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.
மேலும் அந்தச் சுத்தஞானி இறந்த உயிர்களை எழுப்புவதற்குப் பிரமாணம் யாதெனில்: ஒருவாறு தீபப் பிரமாணத்தா லறிக. தீபப் பிரமாணமென்பது யாது? தீபத்தினிடத்தில் காரியஒளி, காரிய காரண ஒளி, காரணஒளி என மூன்று. மேற்படி ஒளியாவன ஒளி, சோபை, பிரகாசம். ஆதலால் கடவுள் காரியமாய்ப் பிரகாசம்போல் சுவர்ணதேகியாய்த் தோன்றினால், அதிதூரத்திலிருக்கிற இருளென்னும் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது பிரகாசமயம். அதுபோல் ஒளி மேற்படி பிரகாசத்திலடங்கிச் சோபை காரிய காரணமாய் இருக்கின்றதுபோல், ஆன்மாக்கள் அஞ் ஞானத்தில் கட்டுண்டு அறிவாகிய தீபத்தைக் கருதினால் மேற்படி அறிவாகிய தீபம் தோன்றின கணமே அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளின் சோபையைக் கண்டால், பஞ்சகிருத்தியமுஞ் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், தக்கணமே அது ஜீவிக்கும். மேலும் பிரகாசம் எங்குமுள்ளது. எந்த இடத்தில் புலை கொலை அகற்றிய சீவர்கள் பிரார்த்தித்தாலும் தக்கணமே அவரது காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்று காரிய உருவமாகிய ஒளி வடிவாய்த் தோன்றி அருள் செய்வர். இதற்குப் பிரமாணம்: சித்தமார்க்கத்திலுள்ள துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் தோய்த்த நூலை நெடுந்தூரங்கட்டி, அங்கங்கு காயாது உபகரணம் பூசி, மனிதர்களை நிற்க வைத்து, மேற்படி சுண்ணத்தை அடியில் காட்டின தக்ஷணமே நுனியில் சிவப்பேறும்.
ஜீவனும் தீபமும்
இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால், அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும். ஆகையால் நாம் வாழ்கிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் தீபம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இருளிருக்கப்படாது. ஒரு வீட்டில் தீபம் வைத்தால் அந்த வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிச்சேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால், அவசியம் தீபம் இருக்க வேண்டியது.
தயா வடிவம்
பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணாற் பார்த்தல். ஒருவன் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணைப் பெற்றுக் கொள்வானானால் அவனுக்கு எல்லாம் பட்டப் பகலைப் போற்றெரியும். அவன்தான் சுத்தஞானி. அந்த நடுக்கண்ணைப் பெற்றுக்கொண்ட சுத்தஞானி தயவோடு ஓர் பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில், அந்தப் பிணம் உயிர் பெற்று மீளவெழுந்திருக்கும். ஒருவனைக் கோபித்துப் பார்த்தால், உடனே அவன் பஸ்பமாய் விடுவான். இதுதான் நடுக்கண் பெற்ற சுத்தஞானிக் கடையாளம். இந்த நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணுக் கொரு கதவும் பூட்டுமிருக்கின்றது. அந்தக் கதவின் பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்கவேண்டும். அருளென்பது பெருந்தயவு. ஆகவே தயவே வடிவமாக இருக்க வேண்டியது.
கடவுள் அனுக்கிரகம்
தீபத்தில் ஒளி, சோபை, பிரகாசம் என்னும் 3-ல் பிரகாசம் காரண அக்கினி, சோபை காரியகாரண அக்கினி, ஒளி காரிய அக்கினி. பிரகாச மயத்தில் கடவுள் காரியமாய் சொர்ணதேகி ஆனாலும், பிரகாசத்தைப் போல் அதிதூரத்திலிருக்கிற இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது.
ஒளியெப்படி அடங்கிச் சோபை காரியகாரணமா யிருக்கிறதோ அதுபோல, ஜீவர்கள் இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில், விளக்கினிடத்து லட்சியம் அதிகரித்த தருணம், ஒளியைக் கண்டால் அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளினது சோபையைக் கண்டால், சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களும் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல் இறந்த ஜீவர்களை ஆண்டவருக்குச் சமீபத்தில் சேர்த்தால் உடனே ஜீவிப்பார்கள். ஆண்டவரது பிரகாசம் எங்கும் உள்ளதால், எந்த இடத்தில் புலை கொலையில்லாமல் ஜீவர்கள் முயற்சி செய்கிறார்களோ, அந்த இடத்தில் கடவுள் வந்து காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்றும் காரிய உருவமாகிய ஒளியாகித் தோன்றி அனுக்கிரகிப்பது சுபாவம். இதற்குப் பிரமாணம்: துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் நனைத்து, அதிக நீளமுள்ள நூலின் ஒரு தலைப்பைச் சுண்ணத்தில் படும்படி நனைத்த உடனே, அந்நூல் முழுமையும் சிவப்பேறுவது போலாம்.