-
அனுஷ்டான விதி
1. அனுஷ்டான விதி
-
உபதேசக் குறிப்புகள்
1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. இதுபோலவே கரணக்காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சியுமுண்டு. இதுபோல், அண்டத்தில் அகம் அக்கினி, அண்டத்தில் அகப்புறம் சூரியன், அண்டத்தில் புறம் சந்திரன், அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் - ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தாலுள்ள இடம்:- பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் பரமாகாசம். காரியகாரணமாயுள்ள இடம் நான்கு:- பிண்டத்தில் விந்து, நாதம். அண்டத்தில் மின்னல், இடி. சர்வயோனியிடத்தும், விந்து விளக்கமாகிய மின்ன லிடத்தும், நாத விளக்கமாகிய இடியிடத்தும்; இல்லாதது பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி என்றும், ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும்... ... மேற் குறித்த அகமாகிய ஆன்மபிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் - இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன மென்றும் சொல்லுகின்றது. ஆதலால் ஏமம், கனகம், ரஜிதம், ரௌப்பியம் முதலாகச் சொல்வதில் சூரியனிடத்தில் கனகமும் சசியிடத்தில் ரஜிதமும்......இதுபோல் பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபையென்றும், ஜீவாகாசம் ரஜிதசபை யென்றும் சொல்லுவது. ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண வியற்கை விளக்கம் காரியமாயும் காரணமாயும் காரியகாரணமாயும் இருக்கின்றது. முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும் அண்டத்தில் ஐந்தும் ஆகிய 9 இடத்திலும் கடவுள் விளக்கம் விசேஷ முள்ளது. ஆதலால் நாம் தினம் ஆறு காலத்திலும் மேற் குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்க வேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்த வேண்டும். மேற்குறித்த காலங்கள் சூரிய உதயம், உச்சிப்போது, சாயர€க்ஷ, மாலை, யாமம், வைகறை - ஆகிய காலங்களில் எல்லாம் வல்ல தலைவனை வணங்குதல் வேண்டும்.
கடவுட் பிரகாசம்
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கிற நான்கிடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தாலுள்ள விவரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, அகப்புறம் - ஜீவன், புறம் - மனம் முதலிய கரணம், புறப்புறம் - கண் முதலிய இந்திரியங்கள். அண்டத்தில் அகம் - அக்கினி, அகப்புறம் - சூரியன், புறம் - சந்திரன், புறப்புறம் - நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் 4, அண்டத்தில் 4, ஆக 8 இடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தா லுள்ளது. ஞானசபையும் நடராஜரும்
ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு. ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.
சூரியன்
ஏமம் கனகம் என்பன சூரியனைக் குறிக்கின்றன. சூரியனிடத்தில் பொன்னிருக்கின்றது.
-
செவ்வாய்க்கிழமை விரத முறை
திங்கட்கிழமை இரவில் பலாகாரஞ்* செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ்செய்து, விபூதியைச் சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை செபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஓம் சிவ சூரியாய நம வென்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து, அதன் பின்பு அவ்விடத்திலேதானே நின்றுகொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக்கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக்கொண்டு, பின்பு ஓம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஓரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுதுபடைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவதரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை** முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும்; சிவசரித்திரங் கேட்க வேண்டும்; செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும்; சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம், சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்கவேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
52. பஞ்சாக்கரம்
சமய சூக்கும பஞ்சாக்கரத்தின் தாத்பரியம் நான்கு, மேற்படி அக்ஷரம் 5: சிவாயநம - இதற்குத் தாத்பரியம் நான்காவன. பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் ஆக 4. இதில் பூர்வத்திற்கு அர்த்தம்: சிவனை நமஸ்கரிக்கின்றேன். பூர்வபூர்வத்திற்குத் தாத்பரியம்: அனாதியில் மலமில்லாது எல்லாமுடைய சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களைச் சமர்ப்பிக்கின்றேன். மற்ற இரண்டிற்கும் அர்த்தம் அனுபவத்தால் தெரியலாம். இதுபோல் மத சன்மார்க்கத்திற்கும் மேற்படி அக்ஷரமே. அதற்கும் முன்போலவே நான்கு தாத்பரிய முள்ளது. அதில் பூர்வத்திற்குத் தாத்பரியம்: சி என்பது பதி, வா என்பது சத்தி, ய வென்பது ஜீவன், ந வென்பது திரோதை, ம வென்பது மாமாயை; ஆதலால், மாமாயை திரோதை நீங்கி, ஜீவ போத மற்று, அருள் வடிவாய்ச் சிவமாவது. பூர்வபூர்வத்தின் தாத்பரியம்: சி என்பது எல்லாமுடையது, வா என்பது அபிந்நமாகிய அருள், ய வென்பது ஆன்ம சிற்சபை, ந வென்பது சீவன், ம வென்பது பசு; ஆதலால் பசுத்தன்மை கெட்டு, ஜீவபோதம் போய், ஆன்ம வியற்கை வடிவாய்ச் சத்துவமயமாய் எல்லாமுடையதுவாய்ப் பூரணமாய் நிற்றல்; ஒருவாறு. அனுபவத்தில், பரவிந்து பரநாதம் பரத்திலும், அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும். இவ்வளவும் செபமூலமாய்க் கரண சுத்தி வந்து, அக்ஷர முன்னுதலை விட்டு, அறிவாகிருதியாய், கருணையும் சிவமுமே பொருளெனும்படி நிற்றற்கு முதற்றுவாரமாம். மற்ற உத்தரத்தில் ஏம சித்தியும் உத்தரோத்தரத்தில் தேகசித்தியும் சொல்லும். இஃது மத சன்மார்க்க அனுஷ்டானம். இதுபோல் சமயத்திலும் தேகசித்தியும் ஏமசித்தியு முள. மேற்குறித்த சமய மதங்களின் விரிவு அனந்தகோடி. அந்த சித்திகள் யாவும் அவ்வச்சமய மதங்களின் கர்த்தா மூர்த்தி தலைவன் தலைவி முதலியவர்கள் பதப்பிராப்தி வரையிலும் நிற்கும். ஆதலால் மேற்குறித்த இரண்டு சித்தியும் எக்காலத்தும் அழிவுறா திருப்பதாகச் சொல்லுவது சுத்த சன்மார்க்க பூர்வோத்தரம். ஏமசித்தி1 தேகசித்தி ஆகிய இவற்றை மேற்குறித்த சூக்கும பஞ்சாக்கரத்தில் சொல்லுவதற்குப் பிரமாணம்:- "சிவாயநம வெனச் செம்பு பொன்னாயிடும்"2 "சிவாயநமவெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாய மொருநாளு மில்லை."3 ஆதலால், மேற்குறித்த அக்கரத்தை மகான்கள் குழுக்குறியாக - வரிவடிவாய் - சுட்டினார்கள். இதை அக அனுபவிகள் தத்துவங்களை அறிந்து, அனுசந்தானஞ் செய்வார்கள். சாதகிகளுக்கு நாவினாலுன்னிக் கரண மோய்ந்தால், தத்துவானுசந்தானஞ் செய்யக்கூடும். உலகிகள் நாவினாலுன்னத் தங்கள் மனோரதம் சித்திக்கும். வகர வித்தை4 யுடையவர்கள் மேற்படி அக்கரத்தின் உண்மையைப் பவுதிகம், லோகம், ஓஷதி, லவணம், முதலியவற்றிற் சேர்த்து வகரத்தை முடிப்பார்கள். தகர வித்தை5 யுடையவர்கள் அதுபோலவே அமைத்துக்கொண்டு தேகத்தை நீடிக்கச் செய்வார்கள். ஆதலால் மேற்குறித்த அக்கரங்கள் பரிபாஷை. இதனது உண்மை யாவும் சுத்த சன்மார்க்க சகஜசாத்திய ஞானானுபவிக்கு விளங்கும்.
-
உபதேசக் குறிப்புகள்
1. ஏமசித்தி - பொன் செய்யும் வல்லபம்.2. திருமந்திரம் 9033. நல்வழி 15 (ஔவையார்)4. வகரவித்தை - பொன் செய்தல்.5. தகரவித்தை - தேகசித்தி செய்துகொள்ளல்.
சிவாய நம
சமயத்தில் சிவாயநம வென்னும் வாக்கியத்திற்குத் தாத்பரியம் 4 வகைப்படும்: பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். பூர்வம்: சிவனை நமஸ்கரிக்கின்றேன் என்பது. பூர்வ பூர்வம்: அனாதியில் மல மில்லாததையும் எல்லாமுடையதாயும் உள்ள சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களைச் சமர்ப்பிக்கிறேன் என்பது. உத்தரம் உத்தரோத்தர மென்னும் பொருளுக்கு விவரம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும்.
பஞ்சாக்ஷரமும் சித்தியும்
சிவாயநம வென்னும் மந்திரத்துக்குப் பொருள் முன்போல் 4 வகை. அதில் பூர்வமாவது: சி என்பது பதி, வா சத்தி, ய ஜீவன், ந திரோதை, ம மாயை. பூர்வ பூர்வமாவது: சி யென்பது எல்லாமுடையது, வ என்பது அபின்னமாகிய அருள், ய ஆன்மாவாகிய சபை, ந ஜீவன், ம பசு, உத்தரத்தின் பொருள்: பரவிந்து பரநாதம் பரத்திலும், அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும். இவ்வளவும் சிவத் தியானமல்ல. தத்துவ அனுசந்தானமே. உத்தரத்தில் ஏமசித்தியும் உத்தரோத்தரத்தில் தேகசித்தியும் சொல்லுவது மத சன்மார்க்க அனுஷ்டானமாம். பஞ்சாக்ஷரத்தில் ஏமசித்தியும் தேகசித்தியும் சொல்வதற்குப் பிரமாணம்: "சிவாயநம வெனச் செம்பு பொன்னாயிடும்" "சிவாயநம வெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளுமில்லை". ஆதலால் பரிபாஷையால் மறுத்தது. மேற்குறித்த ஏமசித்தியும் தேகசித்தியும் எக்காலத்தும் இருக்கும்படியாகச் சொல்வது சுத்த சன்மார்க்கப் பூர்வோத்தரம்.
சிவ சிந்தனை
ஓம் சிவாயநம என்று சதா சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுலகம் அருட்சத்தி, பொருட்சத்தி, கிரியாசத்தி, யோக சத்தி, ஞானசத்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். யோகம் செய்தல் வேண்டுவதில்லை. அதில் அழுந்தி விட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை. மூடம் உண்டாகும். உண்மை.
-
உபதேசக் குறிப்புகள்
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.