-
சுப்பிரமணியம்
உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் குறிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது. அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு(?) மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், சுப்பிரமணிய உண்மையாகிய விளக்க மென்னும் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப்படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் - தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.
-
உபதேசக் குறிப்புகள்
114. வந்தன முறை
ஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள் யோகிகள் சாந்தர்கள் வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாதெனில்:-
வந்தனஞ் செய்வது ஆயுள் விருத்திக்கும் அறிவு விளக்கத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோருக்கும் ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விருத்தியும் அறிவு விளக்கமும் குறைவாகும்.
இதற்குச் சம்பந்தம் யாதெனில், ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தமிருக்கின்றது. எப்படியெனில்: ஒரு திருவிளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல் ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரஹங்காரமென்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி விளக்கு வைக்க வேண்டியது. ஆனால் மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக்கும்போது நோக்கமான கெட்ட உஷ்ணத்தைச் சம்பந்தப்படுத்தினால் லாபஞ் செய்யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அதுபோல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும் இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், கெட்டுப் போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறதல்லவா?
இவற்றால் ஆசாரியனையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும் சிறுவர்களையும் ஆசாரியரும் பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படியெனில்: திருவிளக்கு எரிய - சாதாரண காலத்தில் அதம பக்ஷத்துக்குரிய கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்குவைக்கின்றதும், கொஞ்சம் விசேஷ காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும் ஞானாசாரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேஷ விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல். கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன் அதமபக்ஷம் மத்திமபக்ஷத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக் கொள்வதில் ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய்விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரஹங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில் ஜீவவிருத்தியு முண்டாகின்றது. திருவிளக்கு - அதன் உஷ்ண சம்பந்தமான தைலங்களை விட்டுக் கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய் நெய் முதலியவை விட்டெரிப்பதில் விசேஷப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும் - ஜீவனுக்கு அதன் உஷ்ண சம்பந்தமான மும்மலப் போக்கையுண்டுபண்ணுவதில் ஜீவிப்பு விருத்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரஹங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தையுண்டுபண்ணிக் கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்திற்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும். இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விருத்தியாவது போல் மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விருத்தியடைகின்றது. ஆதலால் ஆசாரியரையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்குவதில் நிரஹங்கார சக்தி பெறுவதனால் ஜீவனுக்கு ஆயுள் விருத்தியுண்டாகின்றது.
சிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில் ஆயுட்குறைவு எப்படியுண்டாவதெனில்: ஒரு மணிவரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில் ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், 1 மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷ்ணத்தைப் பெரிய தீபம் கிரஹ’த்துக்கொள்வதில் ஒருமணி நேரம் எரியவேண்டிய தீபம் அரை மணிக்குள் எரிந்துவிடுவதுபோல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியோர் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மல ரஹ’தமான நிரஹங்கார மெனகின்ற மத்தாப்புக் கொப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப்போல் ஜீவனுடைய ஜீவவிருத்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாய் இருக்கிறது.
ஆசாரியன் பெரியோர் ஞானி யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால் ஆயுள் குறைவு வரமாட்டாது என்றதெப்படியெனின்:- மேற்குறித்தவர்களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால் ஆயுள்விருத்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம்: சமயச் சார்பில் பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் அனுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும் அப்பர்சுவாமி முதலியோரும் வணங்கியது முணர்க. மேலும் சமயமதாதீத ஞானிகளுக்கும் சமயமதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேக மாதியாவும் தமது பதியின் தூலசூக்கும மாதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட்குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும் - இவர்கள் சென்றவிடமெல்லாம் கண்டு சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கை கூப்புவது இயற்கை.
ஆதலால், மலசகிதர்களான ஜீவர்கள் மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்ய பாவத்தில் வணங்கலாதி தொழிலால் ஜீவிப்பின்மையும் விருத்தியும் உண்டாகின்றன. மகான்கள் கை கூப்புவதில் ஆன்மவிருத்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில்: அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.
-
உபதேசக் குறிப்புகள்
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.