-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 108. சமாதி வற்புறுத்தல் samāti vaṟpuṟuttal
1. ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
தருணம்இதே அறிமின் என்றே
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
கின்றார்இம் மனிதர்அந்தோ
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
உளங்கலந்த தலைவா இங்கே
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 099. தத்துவ வெற்றி tattuva veṟṟi
5. பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 031. திருவருட் பேறு tiruvaruṭ pēṟu
10. இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
-
திருவருண் மெய்ம்மொழி
சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும், வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம். ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும்-
-
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
தேவரீர்! திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று நின்மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மைக்கண் இயற்கை இன்பானுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும் சுத்த கலாந்தர்களும் சுத்த போதாந்தர்களும் சுத்த நாதந்தர்களும் சுத்த வேதாந்தர்களும் சுத்த சித்தாந்தர்களும் சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து, 'அற்புதப் பெருஞ் செயல் புரிகின்ற ஐயர்களே! அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும், 'எல்லா பொருள் கட்கும், எல்லாக் குணங்கட்கும் எல்லா பயன்கட்கும் எல்லா அனுபவங்கட்கும் மற்றெல்லாவற்றிற்கும் உருவ சொரூப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லாராகியும் தாக்கியும் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம்! எவ்வாறு கருதுவோம்! என்னென்று கூறுவோம்!' என்று அவ்வவ் கூட்டங்களினுந் தனித்தனி உரைத்து உரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும், எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற் குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞானதேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குண சித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்ட சித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திளெல்லாவற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்யவல்லவராய், சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே, புண்ணிய வசத்தால் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்று, 'சர்வ சுதந்தரராய சாத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுளம் பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆன்நதநீர் பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும், உணர்ந்தோர் வியந்துரைப்பக் கேள்வியுற்று, 'இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ!! என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன்.'
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
15. பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 099. தத்துவ வெற்றி tattuva veṟṟi
17. பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 147. அனுபவ மாலை aṉupava mālai
18. தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
"திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்"
-
நான்காம் திருமுறை / Fourth Thirumurai 002. அருட்பிரகாச மாலை aruṭpirakāsa mālai
28. மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
-
உபதேசக் குறிப்புகள்
95. சுத்த சன்மார்க்கக் கொள்கை
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
இதற்குப் பிரமாணம்: "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், "அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் "இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்" என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.
* திருஅருட்பா 5452, 5695
சன்மார்க்கக் கொள்கை
சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.
ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" "அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை" என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.