-
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
தேவரீர்! திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று நின்மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மைக்கண் இயற்கை இன்பானுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும் சுத்த கலாந்தர்களும் சுத்த போதாந்தர்களும் சுத்த நாதந்தர்களும் சுத்த வேதாந்தர்களும் சுத்த சித்தாந்தர்களும் சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து, 'அற்புதப் பெருஞ் செயல் புரிகின்ற ஐயர்களே! அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும், 'எல்லா பொருள் கட்கும், எல்லாக் குணங்கட்கும் எல்லா பயன்கட்கும் எல்லா அனுபவங்கட்கும் மற்றெல்லாவற்றிற்கும் உருவ சொரூப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லாராகியும் தாக்கியும் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம்! எவ்வாறு கருதுவோம்! என்னென்று கூறுவோம்!' என்று அவ்வவ் கூட்டங்களினுந் தனித்தனி உரைத்து உரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும், எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற் குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞானதேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குண சித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்ட சித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திளெல்லாவற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்யவல்லவராய், சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே, புண்ணிய வசத்தால் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்று, 'சர்வ சுதந்தரராய சாத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுளம் பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆன்நதநீர் பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும், உணர்ந்தோர் வியந்துரைப்பக் கேள்வியுற்று, 'இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ!! என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன்.'
-
சுப்பிரமணியம்
உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் குறிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது. அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு(?) மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், சுப்பிரமணிய உண்மையாகிய விளக்க மென்னும் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப்படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் - தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.
-
சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
"திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்"
-
உபதேசக் குறிப்புகள்
19. சமய நூல்களின் உண்மை
பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. இதுபோல் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவசித்தியே. மேற்குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தாத்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும். இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களு மமைத்துக் கொள்க. ஒருவாறு.
* சௌராதி சண்டை பரியந்தம் - சூரிய பூசை முதல் சண்டேசுவர பூசை முடிய.
புராண ஹ’ருதயம் பெரியபுராணத்திற் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல. புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும். சமய நூல் உண்மை மாணிக்கவாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர். தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற்குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்துக் கற்பனையாய்ச் செய்த சரித்திரம்; அதற்கு மேற்கொள் வேண்டுவதின் பொருட்டுச் சில பாடலுஞ் செய்து, புராணத்தில் மேற்குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிச்சயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல. இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும் சுத்த சன்மார்க்கத்தில் பகிரங்கமாய் இனி வெளிப்படும். (வேறொரு குறிப்பு) சூரபத்மனுடைய யுத்தம் முழுமையும் தத்துவ சம்மாரமே. சுப்பிரமணியர் விநாயகர் மயிலின் மேலும் பெருச்சாளியின் மேலும் ஏறினார்களென்கிற தாத்பர்யம் வேறு. அது தெரியாம லந்தச் சுவாமிகளைத் திருவிழாக் காலத்தில் வாகனங்களின் மேல் ஏற்றுதல் தெரியாமை. 20. சமய நூல்களில் பிழை சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் வெளிப்படும். 21. கற்பமும் பிரளயமும்
மகா கற்பம் - மூலப்பிரகிருதியினின்று உண்டாம் சிருஷ்டி முதல் பிரமாவின் ஆயுள்வரையில் ஏற்பட்டுள்ள காலம்.
அவாந்தர கற்பம் - சதுர்முகப் பிரமனுடைய ஒரு நாட்குரிய காலம்.
இந்த இரண்டு கற்பத்தின் நடுவே ஒவ்வொரு ஒடுக்கமுண்டாகிறது. அது 1. நித்தியம், 2. நைமித்திகம், 3. பிராகிருதிகம், 4. ஆதியந்தகம் என நால்வகைத்தாம்.
நித்தியப் பிரளயம் - மரணமே நித்தியப் பிரளயம்.
நைமித்திகப் பிரளயம் - பிரமனுடைய கற்பமுடிவிலுண்டாகின்ற ஒடுக்கம்.
பிராகிருதிகப் பிரளயம் - மகத்துவ முதல் விசேட பரியந்தம் ஒடுக்கத்தை யடைவது.
ஆதியந்திகப் பிரளயம் - தத்துவஞானத்தால் யோகிக்கு உண்டாகும் ஒடுக்கம்.
-
மனு முறைகண்ட வாசகம்
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ! வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ! கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ! கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! குருவை வணங்கக் கூசிநின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ! பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ! ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ! கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ! வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! சிவனடியாரைச் சீறி வைதேனோ! தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ! தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் - 1
வஸ்திரம், இடம், நிலம், பெண், பொருள் முதலானவைகள் இல்லாமல் துன்பப்படுகின்றவர்கள், அத்துன்பங்களை மனஎழுச்சியால் சகித்துக்கொண்டு உயிர்தரித்துத் தங்களாற் செய்யக்கூடிய முயற்சியைச் செய்யக்கூடும். பசியினால் துன்பம் நேரிட்டபோது மனஎழுச்சியால் அத்துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள். பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வர்களென்பது சொல்லவேண்டுவதில்லை. உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசிநேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் 'பசி நேரிட்டது, என்ன செய்வது!' என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான். பகைவரால் எறியப்பட்டு மார்பிலுருவிய பாணத்தையுங் கையாற் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்டபோது, சௌகரியத்தை யிழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து 'இளைப்பு வருமே' சண்டை எப்படிச் செய்வது!' என்று முறையிடுகின்றார்கள். இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும், இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவலட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள்; பலி நேராதபோது நிலை கலங்குகின்றார்கள். சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்டபோது, சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள். சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை யறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள். இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது, புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள். நாமே பெரியவர் நமக்குமேற் பெரியவரில்லை யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்டபோது, அகங்காரங் குலைந்து ஆகாரங்கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள். ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். இவரிவர் இப்படி இப்படியானால் ஒருவகை ஆதாரமுமில்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடு படார்கள்! அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங்கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமுண்டாகும்! அந்தச் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்லுதற்கும் அருமை என்றறிய வேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
65. கடவுள் ஏகம் அனேகம் கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குப் பொருள்: சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிக ளனேகம்; மதத்தில் பிரமம் ஏகம், ஜீவர்கள் அனேகம்; சாதாரணத்தில் கடவுள் ஏகம், பசுக்கள் அனேகம்; சுத்த சன்மார்க்கத்தில் தனிக்கடவுள் ஏகம், அவ்வருளால் சுத்தமாதி ஞான தேகம் வேறாகப் பெற்ற ஞானிகள் அனேகம் எனக் கொள்க. கடவுள் ஏகம் அனேகம்
கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குத் தாத்பரியம்: சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிக ளனேகம். சமயாதீதத்தில் சொல்லிய பிரமம் முதல் சுத்தப் பிரமம் வரையிலும் ஏகம், அதைப் பெற்றவர்களனேகம். சாதாரண பாகத்தில் கடவுள் ஏகம், ஜீவர்கள் அனேகம். சத்த சன்மார்க்கத்தில் கடவுள் ஏகம். கடவுளருளால் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானிகளனேகம்.
-
உபதேசக் குறிப்புகள்
66. கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல் கடவுள் ஒன்றல இரண்டல ஒன்றுமிரண்டுமானார் என்பதற்குத் தாத்பரியம்: ஒன்றல - கடவுளானவர் ஒன்றாகிய ஞானதேகியும் அல்ல. இரண்டல - சுத்தப் பிரணவதேகியும் அல்ல. ஒன்றுமிரண்டுமானார் - கடவுளானவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞானதேகத்தையும் சுத்தப் பிரணவதேகத்தையுங் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார். இதை அனுபவத்தால் குருமுகத்தில் உணர்க. 67. மூவகை உயிர்கள்
சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆக 3. சகலர் இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை. செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் இம்மூன்று முள்ளவர். பிரளயாகல இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை இவ்விரண்டு முள்ளவர். விஞ்ஞானகலர் இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர். சகலர் ஜீவர்கள். பிரளயாகலர் கல்ப தேகிகள். விஞ்ஞானகலர் காலாதீதர்கள். சுத்தம் 9, அசுத்தம் 9, ஆக 18.
-
உபதேசக் குறிப்புகள்
103. சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.
கடவுள் மயமாவது
ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.
தயவும் கடவுளும்
கடவுள் சர்வஜீவ தயாபரர். ஆகையால் சர்வ வல்லபமுடையவர். அதுபோல் நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லபத்தையும் பெற்றுக் கொள்ளும்படி செய்வார். ஞானிக்குத் தயை அதிகப்பட்டிருப்பதால், அவர் இறந்தவர்களை யெழுப்புதல் முதலிய அற்புதங்களைச் செய்யும் வல்லப முடையவரா யிருக்கின்றார். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை யில்லாதவர்களிடத்துக் கடவுளிருந்து மில்லாமையா யிருக்கிறார். கடவுளிடத்தில் சதா அன்பும் பத்தியும் செலுத்த வேண்டும்.
பத்தி
பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.
(வேறு குறிப்பு)
தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்க ளேற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள் ஆதலால், இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது.
சத்திய ஞானாசாரம்
ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.
-
உபதேசக் குறிப்புகள்
114. வந்தன முறை
ஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள் யோகிகள் சாந்தர்கள் வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாதெனில்:-
வந்தனஞ் செய்வது ஆயுள் விருத்திக்கும் அறிவு விளக்கத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோருக்கும் ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விருத்தியும் அறிவு விளக்கமும் குறைவாகும்.
இதற்குச் சம்பந்தம் யாதெனில், ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தமிருக்கின்றது. எப்படியெனில்: ஒரு திருவிளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல் ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரஹங்காரமென்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி விளக்கு வைக்க வேண்டியது. ஆனால் மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக்கும்போது நோக்கமான கெட்ட உஷ்ணத்தைச் சம்பந்தப்படுத்தினால் லாபஞ் செய்யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அதுபோல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும் இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், கெட்டுப் போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறதல்லவா?
இவற்றால் ஆசாரியனையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும் சிறுவர்களையும் ஆசாரியரும் பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படியெனில்: திருவிளக்கு எரிய - சாதாரண காலத்தில் அதம பக்ஷத்துக்குரிய கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்குவைக்கின்றதும், கொஞ்சம் விசேஷ காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும் ஞானாசாரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேஷ விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல். கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன் அதமபக்ஷம் மத்திமபக்ஷத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக் கொள்வதில் ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய்விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரஹங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில் ஜீவவிருத்தியு முண்டாகின்றது. திருவிளக்கு - அதன் உஷ்ண சம்பந்தமான தைலங்களை விட்டுக் கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய் நெய் முதலியவை விட்டெரிப்பதில் விசேஷப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும் - ஜீவனுக்கு அதன் உஷ்ண சம்பந்தமான மும்மலப் போக்கையுண்டுபண்ணுவதில் ஜீவிப்பு விருத்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரஹங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தையுண்டுபண்ணிக் கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்திற்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும். இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விருத்தியாவது போல் மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விருத்தியடைகின்றது. ஆதலால் ஆசாரியரையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்குவதில் நிரஹங்கார சக்தி பெறுவதனால் ஜீவனுக்கு ஆயுள் விருத்தியுண்டாகின்றது.
சிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில் ஆயுட்குறைவு எப்படியுண்டாவதெனில்: ஒரு மணிவரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில் ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், 1 மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷ்ணத்தைப் பெரிய தீபம் கிரஹ’த்துக்கொள்வதில் ஒருமணி நேரம் எரியவேண்டிய தீபம் அரை மணிக்குள் எரிந்துவிடுவதுபோல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியோர் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மல ரஹ’தமான நிரஹங்கார மெனகின்ற மத்தாப்புக் கொப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப்போல் ஜீவனுடைய ஜீவவிருத்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாய் இருக்கிறது.
ஆசாரியன் பெரியோர் ஞானி யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால் ஆயுள் குறைவு வரமாட்டாது என்றதெப்படியெனின்:- மேற்குறித்தவர்களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால் ஆயுள்விருத்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம்: சமயச் சார்பில் பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் அனுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும் அப்பர்சுவாமி முதலியோரும் வணங்கியது முணர்க. மேலும் சமயமதாதீத ஞானிகளுக்கும் சமயமதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேக மாதியாவும் தமது பதியின் தூலசூக்கும மாதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட்குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும் - இவர்கள் சென்றவிடமெல்லாம் கண்டு சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கை கூப்புவது இயற்கை.
ஆதலால், மலசகிதர்களான ஜீவர்கள் மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்ய பாவத்தில் வணங்கலாதி தொழிலால் ஜீவிப்பின்மையும் விருத்தியும் உண்டாகின்றன. மகான்கள் கை கூப்புவதில் ஆன்மவிருத்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில்: அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.